சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் என்பவர் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளார். எவ்வித நடவடிக்கையும் இது குறித்து எடுக்கப்படததால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 15 இல் உள்ள உதவி ஆணையர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சமூக ஆர்வலர் மண்டல துணை ஆணையரிடம் புகார் தெரிவித்த நிலையில், மூன்று நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக உறுதியளித்தார். இது தொடர்பாக தாசில்தார் சரோஜா கண்காணிக்க வேண்டும் என உத்தரவுபித்த நிலையில் சமூக ஆர்வலரான தங்கவேலை அழைத்து அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றினால் அருகில் உள்ள உங்கள் நில மதிப்பும் பல மடங்கு உயரும். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார் .

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் இந்த இடத்தை விட்டு சென்ற நிலையில், சில நாட்கள் கழித்து மீண்டும் சரோஜா அவரது வீட்டிற்கு தங்கவேலை அழைத்து 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் எனவும், முதல் கட்டமாக 5 லட்சம் ரூபாய் தந்தால் போதும் என பேரம் பேசியுள்ளார். அதன் பிறகு ஆக்கிரமிப்பு அகற்றிய உடன் முழுத் தொகையை பெற்றுக் கொள்வதாக சரோஜா தெரிவித்துள்ளார். இதற்கும் தங்கவேல் ஏற்காததால் முன்பணமாக மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முடியும் என பொன் தங்கவேல் தெரிவித்துள்ளார். இருப்பினும் லஞ்சம் பணம் தர தங்கவேலுக்கு விருப்பம் இல்லாததால், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த ஆலோசனையின் படி, ரசாயனம் தடவிய மூன்று லட்ச ரூபாயை தங்கவேல் அடையாறில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது சரோஜா தனது கணவரின் நண்பர் காவலர் அருண்குமார் என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அவரிடம் பணத்தை கொடுத்து தங்கவேல் மறுத்த நிலையில் அருண்குமார் போன் செய்து தன்னை நம்பலாம் என்று கூறி உள்ளார். இதனையடுத்து ரசாயன தடவிய பணத்தை காவலர் அருண்குமாரிடம் கொடுக்கச் சென்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதையடுத்து அருண்குமார் அளித்த தகவலின் பெயரில் தாசில்தார் அலுவலகம் சென்று சோதனை மேற்கொண்டு அவரையும் கைது செய்துள்ளனர். 4 மணி நேரம் லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னை அடையார் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். பல முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் திவீர விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.