பொதுவாகப் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார் பாதுகாப்பானது என்று கருதப்படும் நிலையில், மும்பை மீரா ரோடு பகுதியில் கார் ஏர்பேக் வெடித்ததால் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோகித் சோனி என்ற இளைஞர் தனது 15 ஆண்டுகள் பழமையான ஹோண்டா காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஏர்பேக் திடீரென வெடித்துள்ளது. ஏர்பேக்கின் கவர் அதிவேகமாக வெளியேறியதில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கார் எந்த விபத்திலும் சிக்காத நிலையில், இந்த விபத்து நடந்திருப்பது அனைவரையும் கலங்கடித்துள்ளது. பழமையான கார்களில் சென்சார் கோளாறுகள் அல்லது ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏர்பேக் தவறாக இயங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏர்பேக் வெடிக்கும்போது அது மணிக்கு 300 கி.மீ வேகத்தில் வெளியேறுவதால், பழைய கார்களில் அதன் உதிரிபாகங்கள் ஆபத்தான ஆயுதம் போலச் செயல்படக்கூடும். எனவே, பழைய கார் வைத்திருப்பவர்கள் அதன் பாதுகாப்பு அமைப்புகளைச் சரியான முறையில் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.
காரின் டேஷ்போர்டில் ‘ஏர்பேக் வார்னிங் லைட்’ எரிந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சரிபார்க்க வேண்டும் என்றும், கார் ஓட்டும்போது ஸ்டீயரிங் வீலில் இருந்து பாதுகாப்பான இடைவெளியில் அமர வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
