உத்திரபிரதேசத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் 15 வயது சிறுமி ஒருவர் அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதான அரவிந்த் விஸ்வகர்மா என்ற இளைஞர் ஒருவர் அந்த இளம் பெண்ணை காதலிக்க வற்புறுத்தியதாக  கூறப்படுகிறது.  அந்த இளம் பெண் இளைஞரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி தன்னுடைய  உறவினர் ஒருவருடன் பயிற்சி நிறுவனத்தில் இருந்து நேற்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது அங்கு வந்த அரவிந்த் சிறுமியின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிர் இழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய  அரவிந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.