ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மக்கள், அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் மத்திய, மாநில மீட்புக் குழுவினர் என அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்..

ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதாவது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதி கவிழ்ந்த நிலையில், அதன்மீது யஷ்வந்த்பூர் – ஹவுரா விரைவு ரயில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்..

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 56 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.. அதே சமயம் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒடிசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.. அதேபோல பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன், ஜப்பான், சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, நேபாளம், இலங்கை, பூடான், இத்தாலி, தைவான் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்..

இதற்கிடடையே இன்று மாலை பிரதமர் மோடி மற்றும் மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச்சென்று பார்வையிட்டு, பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.. பின் செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி “இது ஒரு பெரிய விபத்து, ஒவ்வொரு கோணத்திலும் விசாரணைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்,” என்று கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மீட்பு குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது. தங்களின் அன்பான வார்த்தைகள், துயருற்றிருக்கும் குடும்பங்களுக்கு வலிமை தரும். தங்களின் ஆதரவிற்கு நன்றி.

இரயில்வே, NDRF, ODRAF, உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு சேவை, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பலர் தரையில் அயராது உழைத்து மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொரு நபரையும் நான் பாராட்டுகிறேன். தங்களின் அர்ப்பணிப்புக்கு பெருமை.

துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் உண்மையிலேயே ஊக்கமளிப்பவை. ஒடிசாவில் ரயில் விபத்து நடந்தவுடன், மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமானோர் ரத்ததானம் செய்ய வரிசையில் நின்றனர்.” என தெரிவித்துள்ளார்..