ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தரக்கோரியும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது மூன்று நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தயவு செய்து பதில் அளிக்க காலதாமதம் ஏற்படுத்தாதீர்கள் என தேர்தல் ஆணையத்தினை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
அ.தி.மு.க வழக்கில் பழனிசாமி தரப்பில் எதிர் மனுதாரர்கள் மூன்று நாட்களில் பதில் அளித்திடவும் இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் நாளை நடைபெற உள்ள நிலையில் ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் இ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் இரட்டை இலை எந்த தரப்பினருக்காவது கிடைக்குமா? அல்லது முடக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.