ஆளுநர் ஆர்.என் ரவி சமீபத்தில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என அழைக்கலாம் என கூறியுள்ளார். அப்போதே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற பல விஷயங்களை அவர் தவிர்த்துள்ளார். அதாவது தமிழ்நாடு, சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை, மத நல்லிணக்கம் போன்றவை. அது மட்டுமல்லாமல் பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், அம்பேத்கர் போன்றவர்களின் பெயர்களையும் தவிர்த்துவிட்டார்.
உடனடியாக ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அதிரடி காண்பித்தார். இதனால் ஆளுநர் ரவி பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அந்த வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆறுசாமி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆளுநரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி உள்ளனர். மேலும் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவர் எழுந்து சென்றது ஜனநாயக மரபு கிடையாது எனவும் கூறியுள்ளனர்.