உத்தரப் பிரதேச மாநிலத்தில், கள்ள உறவை எதிர்த்த கணவனை மனைவியே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. விவசாயியான குன்வர்சென் என்பவருக்கு, தன் மனைவி கமேந்திரி மீது சந்தேகம் இருந்துள்ளது.

அந்தப் பெண் தனது மருமகனுடன் முறையற்ற உறவில் இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தால், தம்பதியிடையே அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளன. சம்பவத்தன்று இரவு கணவர் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது, கமேந்திரி இரும்புக் கம்பியால் அவரது தலை மற்றும் கால்களில் தாக்கியுள்ளார்.

பின்னர், அவர் சாகும் தருவாயில் இருந்த போது தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத்திணறச் செய்துக் கொன்றுள்ளார். கொலைக்குப் பிறகு, கணவருக்குத் திடீரென உடம்பு முடியாமல் போய்விட்டதாகக் கூறி, மயங்கி விழுவது போல் நடித்து அந்தப் பெண் நாடகமாடியுள்ளார்.

ஆனால், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது, இந்த தம்பதியின் 5 வயது மகன் ஹிமான்ஷு உண்மையை உடைத்துள்ளான். “அம்மா தான் அப்பாவைக் கொன்றார், அவர் வாயின் மீது தலையணையை வைத்தார்” என்று அந்தச் சிறுவன் கண்ணீருடன் போலீசாரிடம் கூறியுள்ளான்.

இதைக் கேட்டு அதிர்ந்த போலீசார், உடலை உன்னிப்பாக ஆய்வு செய்த போது குன்வர்சென்னின் உடலில் கடுமையான காயங்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து, கொலை செய்த கமேந்திரியை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

தற்போது குன்வர்சென்னின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், குடும்பத் தகராறு மற்றும் கள்ள உறவு உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.