புனே மாவட்டம் லோனாவாலா பகுதியில் உள்ள லோஹ்காட் கோட்டையிலிருந்து, பிரபல பில்டர் விஷால் அகர்வாலின் மகன் கேதன் அகர்வால் கடந்த ஜூன் 18 அன்று கீழே தள்ளிவிடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி தரும் கொலையைச் செய்தது வேறு யாரும் இல்லை, கேதனின் வருங்கால மனைவியான சியா கோயல் மற்றும் அவளது காதலன் சேதன் சௌத்ரி என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இது முற்றிலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலை என்பதால், போலீஸார் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமையன்று சியா கோயலை புனேயில் உள்ள அவரது வீட்டிற்கும், லுல்லாநகர் பகுதியிலுள்ள ஃபக்ரி ஹில்ஸ் மற்றும் ஏரியா 37 ஆகிய இடங்களுக்கும் போலீஸார் நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, கொலை நடந்த நாளன்று சியா கோயல் அணிந்திருந்த ஆடைகளையும் போலீஸார் முக்கிய ஆதாரமாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இப்படி கொடூரமான குற்றத்தைச் செய்துவிட்டு போலீஸாரிடம் சிக்கிய சியா கோயல், புனேயில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது, அங்கு கூடியிருந்த ஊடகங்களின் கேமராக்களைப் பார்த்து சற்றும் பயமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் அசிங்கமான முறையில் ஆபாச சைகை செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருவதுடன், கொலைக் குற்றவாளியாகக் கைதான பிறகும் அவரிடம் எந்தவொரு வருத்தமும் இல்லை என பொதுமக்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சியா கோயல் மற்றும் சேதன் சௌத்ரியின் கொலைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நடமாட்டங்களை முழுமையாகக் கண்காணித்து வரும் புனே ஊரக போலீஸார், அவர்கள் சென்ற அனைத்து இடங்களிலும் முக்கிய ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். இதற்கிடையே, குற்றவாளிகள் இருவரின் போலீஸ் காவலும் இன்றுடன் முடிவடைவதால், நீதிமன்றம் அவர்களை அடுத்ததாக எந்தக் காவலில் வைக்க உத்தரவிடும் என்ற பரபரப்பு புனேயில் தொற்றிக் கொண்டுள்ளது.