இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு 6-ஆம் வகுப்பு பொது அறிவு புத்தகத்தில் ஒரு அத்தியாயம் இடம்பெற்றிருப்பது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது அறிவு புத்தகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் மெலோனியின் அரசியல் பயணம் குறித்த தனிப்பக்கங்கள் இடம்பெற்றிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பான காணொலியில் இடம்பெற்ற நகைச்சுவையான கருத்துகளும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, ஜார்ஜியா மெலோனி 1977-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி ரோம் நகரில் பிறந்தவர். தனது 15-ஆவது வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், பின்னர் ரோம் மாகாணத்தில் கவுன்சிலராகப் பணியாற்றியதாகவும், இளைஞர்கள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலிய அரசியலில் படிப்படியாக முன்னேறிய அவர், 2008-ஆம் ஆண்டு இளைஞர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் என்றும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு ‘பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ என்ற அரசியல் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக மெலோனி இருந்ததாகவும், 2014-ஆம் ஆண்டு அந்தக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதாகவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது அரசியல் செல்வாக்கு அதிகரித்த நிலையில், 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி இத்தாலியின் பிரதமராகப் பொறுப்பேற்றார். இதன்மூலம் இத்தாலியின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார்.

6-ஆம் வகுப்பு பொது அறிவு புத்தகத்தில் சர்வதேச அரசியல் தலைவரான மெலோனியின் அரசியல் பயணம் இடம்பெற்றிருப்பது இணையத்தில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது இளம் வயது அரசியல் தொடக்கம், அமைச்சர் பதவி, அரசியல் கட்சி உருவாக்கம் மற்றும் பிரதமராக உயர்ந்தது உள்ளிட்ட தகவல்கள் மாணவர்களுக்கான பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இதனைப் பார்த்த ஒருவர் பதிவு செய்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மெலோனியின் அரசியல் பயணம் குறித்த இந்தப் பதிவு இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது.