உலகக்கோடீஸ்வரரான எலான் மஸ்க்கையே மிஞ்சும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வங்கி அட்டையில் கோடிக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்பட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரிட்டனின் நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்த சோபி டவுனிங் என்ற இளம்பெண் தனக்கு பரிசாகக் கிடைத்த காபி விற்பனையகத்தின் பரிசு அட்டையைப் பயன்படுத்தியபோது இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அந்த அட்டையில் அறுபத்து மூன்று குவாட்ரில்லியன் பவுண்டுகள் இருப்பு இருப்பதாகக் காட்டியதைக் கண்டு அவரும் அங்கிருந்த ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தத் தொகையானது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை விட பல ஆயிரம் மடங்கு அதிகம் என்பதுடன் பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விடவும் பல மடங்கு பெரியதாகும். இருப்பினும் இந்த மலைப்பூட்டும் தொகையை அந்த இளம்பெண்ணால் காபி மற்றும் சிற்றுண்டிகள் வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதுதான் இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயம்.
அந்த அட்டையில் இருந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதன் அடையாளக் குறியீட்டு எண் தவறுதலாக இருப்புத் தொகையாகக் காட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்தப் பெண் நினைத்தால் வாழ்நாள் முழுவதும் இலவசமாகக் காபி குடிக்க முடியும் என்றாலும் தார்மீக அடிப்படையில் அந்த அட்டையை மீண்டும் பயன்படுத்தப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக ஒரு நிமிடம் உணர வைத்த இந்த வினோத நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
