பிரேசிலின் அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியின சிறுவர்கள், தங்களை உண்மையான ஆண்களாக நிரூபிப்பதற்கு உலகிலேயே மிகக் கொடூரமான ஒரு சோதனையை எதிர்கொள்கின்றனர். இந்தச் சடங்கில், நூற்றுக்கணக்கான ‘புல்லட் எறும்புகள்’ அடைக்கப்பட்ட கையுறைகளை அச்சிறுவர்கள் அணிய வேண்டும். இந்தப் பெயர் வரக் காரணமே, இந்த எறும்பு கடித்தால் ஏற்படும் வலி ஒரு துப்பாக்கி குண்டு உடலில் பாய்வதற்கு சமமாக இருக்கும் என்பதால் தான்.

இந்நிலையில் தேனீ கொட்டுவதை விட 30 மடங்கு அதிக வலியைத் தரும் இந்த எறும்புகள் நிறைந்த கையுறையை, அச்சிறுவர்கள் சுமார் 10 நிமிடங்கள் அணிந்திருக்க வேண்டும். இந்த வலியைக் கற்பனை செய்தாலே எவருக்கும் நெஞ்சம் பதறும். மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், அந்த எறும்புகள் கடிக்கக் கடிக்க அந்தச் சிறுவர்கள் அழவோ அல்லது வலியால் துடிக்கவோ கூடாது அப்படிச் செய்தால் அவர்கள் பலவீனமானவர்களாகக் கருதப்படுவார்கள்.

மேலும் எறும்புகளின் விஷம் உடலில் ஏறுவதால் கைகள் தற்காலிகமாக செயலிழந்து உடல் பல நாட்களுக்கு நடுக்கத்துடனே இருக்கும். ஒருவன் முழுமையான வீரனாக அங்கீகரிக்கப்பட, தன் வாழ்நாளில் சுமார் 20 முறை இந்தத் தற்கொலைக்குச் சமமான சோதனையைச் சந்திக்க வேண்டும். கஷ்டங்களை அனுபவிக்காமல் ஒருவன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாது என்ற நம்பிக்கையே இந்த விசித்திரமான மற்றும் பயங்கரமான பாரம்பரியத்திற்குப் பின்னால் உள்ளது.