சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு ஆடுதொட்டி வ.உ.சி நகரில் விஜயகுமார் நர்மதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நர்மதாவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று நர்மதாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு இருந்ததால் உறவினர்கள் அவரை புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை அளித்தும் ரத்தப்போக்கு குறையாததால் மாலை 4 மணிக்கு மேல் சிகிச்சைக்காக நர்மதா எழும்பூர் அரசு முகப்பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை பிரிவில் நர்மதாவை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நர்மதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நர்மதாவின் கணவர் விஜயகுமார் கூறியதாவது, காலை 10:30 மணிக்கு புளியந்தோப்பில் இருக்கும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் நர்மதாவை அனுமதித்தோம். டாக்டர்கள் யாரும் இல்லாததால் தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்து செவிலியர்களே நர்மதாவுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் உடல்நிலை மோசமானதால் மதியம் 2:30 மணிக்கு டாக்டர்கள் வந்து எனது மனைவியை மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் நர்மதா உயிரிழந்தார். எனவே எனது மனைவியின் உயிரிழப்புக்கு காரணமான புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என விஜயகுமார் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.