உத்தரப்பிரதேச மாநிலத்தின் மோறடாபாத் பகுதியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, போலீசார் மிகப்பெரிய பாலியல் மனிதக் கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர். வேலை தேடி வெளி ஊருக்கு செல்லும் இளம் பெண்களை வலுக்கட்டாயமாக கடத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து வந்த 3 பெண்களை இந்த கும்பல் கைது செய்திருந்தது. இதில், இரண்டு பெண்கள் தப்பியோடி ரயிலில் பயணித்தபோது, டிடிஇயிடம் தங்களது கொடூர அனுபவங்களை பகிர்ந்ததன் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் கும்பலை சுற்றிவளைத்து, மோதலில் ஈடுபட்டனர். இதில், அவ்னீஷ் யாதவ் மற்றும் விஜய் தாக்கூர் ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகள் காயமடைந்துள்ளனர். இவர்கள் பெண்களை கடத்தியதோடு, அவர்களை பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த இருவரும் போலீசாரின் காவலிலும் மருத்துவக் கண்காணிப்பிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோறடாபாத் போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, குற்றவாளிகள் சிறுமிகளை வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஏமாற்றி, பின்னர் அவர்கள் மீது பாலியல் வன்முறை செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்து கொண்டு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது போன்ற மோசடியிலிருந்து பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
