திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகம் அருகே ஒரு வீட்டின் மாடியில் உள்ள அறையில் சில மாணவிகள் தங்கி படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு ஒரு மாணவி மற்றும் எழுந்தார்.

அப்போது அருகே ஒரு வாலிபர் படுத்திருந்ததை கண்டு மாணவி திருடன், திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். அப்போது கீழ் தளத்தில் இருந்த வீட்டில் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினால் வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவர் மதுரையை சேர்ந்த சதாம் உசேன்(28).

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஆண்டு சதாம் உசேன் சொந்த ஊருக்கு வந்தார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சதாம் உசேன் வீடுகளுக்குள் புகுந்து மாடிக்கு சென்று தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இதேபோல அவர் மாணவிகள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.