திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் விஜய் முருகன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் ஆரணி தொகுதி தலைவராக இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் பிரித்து கோடிக்கணக்கான மதிப்பில் சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் விஜய் முருகன் வீட்டிற்கு சென்றனர். அவருடைய வீட்டை இழுத்து மூடி பூட்டு பூட்டனர்.

இதனால் சத்தம் கேட்டு வெளியே வந்த விஜய் முருகன் கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து ஆரணி டவுன் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் ‌ சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர் தங்களிடம் சீட்டு வாங்கி பணம் மோசடி செய்து விட்டதாகவும் தங்களிடம் மோசடி செய்த பணத்தில் புதியதாக சொத்து வாங்கி இருப்பதாகவும் கூறினர். அதோடு இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினர்.

இதனையடுத்து காவல்துறையினர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதால் இது  தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர்தான் விசாரணை நடத்துவார்கள் என்பதால் அங்கு புகார் அளியுங்கள் என்று கூறி அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர். அதன் பிறகு விஜய் வர்மா உட்பட அவருடைய வீட்டில் இருந்த 4 பேரையும் காவல்துறையினர் மீட்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.