கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஆணிகாரன் தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி என்கிற ஆயிஷா(25). நேற்று மகேஸ்வரி தனது கை குழந்தை மற்றும் உறவினர்கள் 4 பேருடன் லப்பை தெருவில் இருக்கும் பள்ளிவாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆயிஷாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது, நானும் சிதம்பரம் அம்பலத்தாடி தெருவில் வசிக்கும் பக்கிம் அஸ்லாம்(25) என்பவரும் ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்தோம். அதன்பிறகு நான் கர்ப்பமானேன். இதுகுறித்து பக்கிம் அஸ்லாம் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தும் அவர்கள் என்னை ஏற்று கொள்ளவில்லை.

இதனையடுத்து பக்கிம் அஸ்லாம் கூறியதை கேட்டு எனது பெயரை ஆயிஷா என மாற்றி முஸ்லிம் மதத்திற்கு மாறினேன். இதற்கிடையே எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் எனக்கு தெரியாமல் பக்கிம் அஸ்லாமை அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து போலீசார் விசாரணைக்காக அவர்களை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளிக்க வைத்தனர். அந்த புகாரில் ஆயிஷா எனது கணவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.