ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை மீனவர் குப்பத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பசுபதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுபதி தான் வாங்கிய காருக்கு தவணை முறையில் பணம் செலுத்தி வந்தார். சில மாதமாக காருக்கு உரிய தவணைத் தொகை கட்ட இயலாததால் பசுபதி வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் ஓட்டு வீடு என்பதால் வங்கி ஊழியர்கள் கடன் கொடுக்க மறுத்தனர். இதனால் சம்பந்தப்பட்ட கம்பெனியில் இருந்து காரை எடுத்து சென்றனர்.

இந்நிலையில் கடனை அடைக்க ஆன்லைனில் ரம்மி விளையாடி பணம் சம்பாதிக்கலாம் என பசுபதி நினைத்தார். ஆனால் ரம்மியில் 30 ஆயிரம் ரூபாய் வரை இழந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பசுபதி யாரிடமும் சரியாக பேசாமல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பசுபதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.