கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் பத்மாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பத்மாவதிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் பத்மாவதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 நாட்களாக எந்தவித சிகிச்சையும் அளிக்காததால், உறவினர்கள் பத்மாவதியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், பிரசவத்தின் போது பத்மாவதியின் குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டதால் தான் வயிறு வலி ஏற்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பத்மாவதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நேற்று காலை பத்மாவதி மற்றும் அவரது உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிகிச்சை அளிக்கும் வகையில் பத்மாவுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். அதற்கு போலீசார் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு பத்மாவதியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.