அலுவலகம் சென்று பணிபுரியும் கலாசாரத்தால், கணவன் – மனைவி உறவில் இருந்த நெருக்கம் குறைந்து, அவர்களுக்குள் தூரம் அதிகரித்திருந்த ஒரு திருமண வாழ்க்கையை, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறை எதிர்பாராதவிதமாகக் காப்பாற்றியதாக ஒரு நபர் ரெடிட் சமூக ஊடகத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள கதை தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக, WFH பற்றிப் பேசும்போது, மக்கள் தூக்கம் அல்லது பயணச் சிரமங்கள் குறைவதைப் பற்றியே அதிகம் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், தனக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மை, மனைவியுடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்ததுதான் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். முன்னர், அவர் மனைவி விழிப்பதற்கு முன்பே வீட்டிலிருந்து கிளம்பி, இரவு 7 அல்லது 8 மணிக்கு சோர்வாகத் திரும்புவார். இதனால், இருவருக்கும் சின்னச் சின்ன உரையாடல்களுக்குக்கூட நேரம் கிடைக்கவில்லை. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, அவரது பணி முழுமையாக WFH-க்கு மாறியதால், அவரது “பயணம்” என்பது படுக்கையறையில் இருந்து வரவேற்பறையில் உள்ள மேசைக்குச் செல்லும் 12 அடி தூரம் மட்டுமே என்று அவர் விவரித்துள்ளார்.
இதனால், இருவரும் சேர்ந்து காலை காபி குடிப்பதுடன் அன்றைய நாளைத் தொடங்குவது ஒரு சின்னப் பழக்கமாக மாறியுள்ளது. காபியை முடித்த பின்னரே அவர் மடிக்கணினியைத் திறக்கிறார். மதிய உணவின்போது அரை மணி நேரம் வேலைக்கு இடைவெளி எடுத்துக்கொண்டு இருவரும் சேர்ந்து சமைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
WFH முறை தங்கள் திருமண உறவை வார இறுதி நாட்களில் மட்டும் இருந்த ஒரு நிலைமையில் இருந்து, தினசரி வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வைத்ததாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாற்றங்களால் தன் வேலைத் திறன் குறையாமல், மன அழுத்தம் இல்லாமல் இருந்ததால் மேம்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்குப் பல இணையப் பயனர்கள், “இப்படித்தான் வாழ்க்கை இருக்க வேண்டும்” என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
