ஹரியானாவில் வாரந்தோறும் நடைபெறும் VIP அல்லது ஃபேன்சி கார் எண் தகடுகளுக்கான ஆன்லைன் ஏலத்தில் இந்த வாரம் நடந்த பரபரப்பு, தேசிய அளவில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. HR88B8888 என்ற பதிவு எண், ரூ.1.17 கோடி எனும் அதிர்ச்சி விலையில் விற்கப்பட்டு, இதுவரை இந்தியாவில் வாங்கப்பட்ட மிக விலையுயர்ந்த கார் எண் தகடாக சாதனை படைத்துள்ளது.

புதன்கிழமை மாலை 5 மணியுடன் ஏலம் நிறைவுபெற்றது. தொடக்க விலை ரூ.50,000 என்றாலும், ஏலதாரர்கள் மத்தியில் ஏற்பட்ட கூர்மையான போட்டியால் விலை வேகமாக உயர்ந்தது. நண்பகலுக்குள் ஏலம் ரூ.88 லட்சத்தை தொட்டது. இறுதியில், மாலை 5 மணிக்கு ரூ.1.17 கோடி என்ற சாதனையுடன் ஏலம் முடிந்தது.

கடந்த வாரத்தில் அதிக விலையில் விற்கப்பட்ட HR22W222 பதிவு எண் ரூ.37.91 லட்சம் மட்டுமே பெற்றிருந்த நிலையில், இந்த வார ஏலம் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

இந்த பதிவு எண்ணில் உள்ள இலக்கங்களும், அமைப்பும், அதன் மீது ஏற்பட்ட பேரார்வத்திற்குக் காரணமாக இருந்தன. அதாவது HR – ஹரியானா மாநிலத்தை குறிக்கும்

88 – அந்த மாநிலத்தின் குறிப்பிட்ட பிராந்திய போக்குவரத்து அலுவலகக் குறியீடு B – அந்த RTO வழங்கும் தொடர் குறியீடு 8888 – தனிப்பட்ட, அரிய, கவர்ச்சிகரமான எண் வரிசை முக்கியமாக, B என்ற எழுத்து, தனது வடிவத்தில் எண் 8 ஐ ஒத்திருப்பதால், முழுப் பதிவு எண் தொடர்ச்சியான எட்டு எண்களால் ஆனது போல காட்சியளிக்கிறது. பல கலாச்சாரங்களில் எண் 8 செழிப்பு, அதிர்ஷ்டம், வளம் ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுவது, இந்த எண்ணின் மதிப்பை மேலும் உயர்த்தியது.

இந்த காரணங்களால் 45 பேர் போட்டியிட்டு, ஏலத்தில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது.