கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் இந்திராநகர் ஐந்தாவது தெருவில் ஏசுதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சகாயத் திவ்யா(19), சகாய பூஜா மவுலிகா(16) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து ஏசுதாசன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

மூத்த மகள் திவ்யா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பூஜா அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவர் இல்லாததால் மகள்களை படிக்க வைக்கவும், அன்றாட வாழ்க்கையை நடத்தவும் அனிதா கூலி வேலைக்கு சென்று வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் பணக்கஷ்டம் ஏற்பட்டது.

இது தொடர்பாக அனிதா தனது இரண்டு மகளிடமும் மனம் விட்டு பேசினார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு அனிதாவும் அவரது இரண்டு மகள்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அனிதா எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் எனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தாய் என்ற முறையில் எனது இரண்டு மகள்களையும் கவனிக்க முடியவில்லை. பண பிரச்சனையும் ஏற்பட்டது. மன உளைச்சல் அதிகமானதால் நானும் எனது மகள்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.