நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை உடையது. இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றி திரிவதால் மாலை 6 மணிக்கு மேல் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக 6 யானைகள் கெத்தை மலை பாதையில் முகாமிட்டு சாலையில் சுற்றி திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து குட்டியுடன் தாய் யானை சாலையில் உலா வருகிறது.

சில நேரங்களில் குட்டி யானை கிளைகளை சாலையில் இழுத்து போட்டு சேட்டையில் ஈடுபடுகிறது. அதனை வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுகின்றனர். அந்த யானைகள் எதுவும் செய்யாமல் அமைதியாக உலா வருகிறது. எனவே யானைகளுக்கு இடையூறு அளிக்காமல் கவனமாக செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.