கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகுது சீக்கிரம் எழுந்திரு என குடும்பத்தினர் எழுப்பி உள்ளனர். ஆனால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு சிறுமி மயக்க நிலையில் இருந்தார்.

இதுகுறித்து கேட்டபோது தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அதாவது சுமாராக படிக்கும் மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்தது. அதன்படி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தூக்க மாத்திரை சாப்பிட்ட எட்டாம் வகுப்பு மாணவியும் ஒருவர்.

அந்த சிறப்பு வகுப்பு 7-ஆம் வகுப்பு நடக்கும் அறையில் நடந்தது. அப்போது சில மாணவிகள் நீ இன்னும் ஏழாம் வகுப்பு தாண்டவில்லையா? என கூறி சிறுமியை கிண்டலடித்தனர். இதனால் மன உளைச்சலில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு சிறுமி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.