மதுரையில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குப் பின் உண்மைத் தகவல்களை மக்களிடம் விளக்கும் தார்மீகப் பொறுப்பிலிருந்து தி.மு.க. அரசு விலகி விட்டதாக கண்டித்தார். முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்ததாக அறிவித்து, அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால், அதன் பின் மின்வாரிய உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், கூடுதல் டிஜிபி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தனர். வருவாய்த் துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரும் தொடர்ந்து அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டு, இதுபற்றிய கருத்துக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததோடு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவசரமாக கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விசாரணை ஆணையத்தை அரசுக்கு சாதகமாக வழிநடத்த முயல்கிறதா என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்து கொண்டிருக்கிறது என்று உதயகுமார் கூறினார். பொதுவாக விசாரணை ஆணையம் அமைந்த பின், அரசு அதிகாரிகள் அது தொடர்பான வாதங்கள், வீடியோக்கள் வெளியிடுவது ஆணையத்தின் நடுநிலைத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
திறமையால் மக்கள் நம்பிக்கையைப் பெற்ற உயர் அதிகாரிகளை தி.மு.க. அரசு தவறாக வழிநடத்துவதாக சந்தேகம் எழுகிறது. தற்போது கள நிலவரம், ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டதற்கான அடையாளமாக உள்ளது. எனவே, அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 34-வது திண்ணைப் பிரச்சாரத்தில் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
2026-ல் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் ஆட்சி எடப்பாடி கே. பழனிச்சாமியின் தலைமையில் மீண்டும் மலரும் என்று உதயகுமார் உறுதியாகத் தெரிவித்தார்.
