திருவண்ணாமலை மாவட்டத்தில்  இரவு ரோந்து பணியில் இருந்த போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் – சுந்தர் (32) மற்றும் சுரேஷ்ராஜ் (30). இருவரும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர்கள்.

இவர்கள் கடந்த 30-ம் தேதி, இ திருவண்ணாமலை ரிங் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சித்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வாழைதார் ஏற்றி வந்த ஒரு மினிவேனை தடுத்து நிறுத்தினர். அந்த வேனில் 20 வயது இளம்பெண் மற்றும் 45 வயது பெண் பயணித்துக் கொண்டிருந்தனர்.

டிரைவரிடம் விசாரித்த போலீசார், இருவரும் உறவினர்கள் என்றும் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளதாகவும் பதிலளித்தும், சந்தேகப்படுத்திய போலீசார் இரு பெண்களையும் வாகனத்திலிருந்து இறக்கி விட்டு, போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு பெண்களையும் தனித் தனியாக இரு மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் சென்ற அவர்கள், திருவண்ணாமலை–வேட்டவலம் சாலையில், ஏந்தல் கிராமம் அருகே உள்ள மயான பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு, சித்தியின் முன்னிலையில் இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மயக்கமடைந்த இளம்பெண், அந்த இடத்தில் சித்தியுடன் தவித்த நிலையில் சத்தம் கேட்ட பொதுமக்கள் அவசரமாக போலீசாருக்கு தகவல் வழங்கினர். இளம்பெண் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரு போலீசாரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற காவலில் உள்ள சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் இருவரும் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது.