மும்பை செம்பூர் பகுதியில் பில்டர் சுஷில் ரஹேஜா என்பவரது அலுவலகத்தில் நடந்த தாக்குதலும், அங்குள்ள ஒரு கண்ணாடி கதவு காட்டிய ‘கெத்து’ம் இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தனது ஊழியர் ராகுல் ஜாதவ் என்பவரை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக சுஷில் ரஹேஜா மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து, வஞ்சித் பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர். ஒரு பெண் ஹாக்கி மட்டையால் அங்கிருந்த கண்ணாடி கதவை ஆவேசமாக சரமாரியாகத் தாக்கினார்.

ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அந்தப் பலமான அடிகளுக்குப் பிறகும் அந்தக் கண்ணாடி கதவு உடையவும் இல்லை, ஒரு சிறு விரிசல் கூட விழவும் இல்லை. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் “இந்தக் கதவைச் செய்த கம்பெனி எது?” எனத் தேட ஆரம்பித்துவிட்டனர்.

பலரும் இது ‘செயிண்ட் கோபைன்’ நிறுவனத்தின் கண்ணாடியாக இருக்கும் என ஆரூடம் கூறி வருகின்றனர். ஒரு பக்கம் ஜாதி ரீதியான வசவுகளுக்காக பில்டர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ஒரு பக்கம் நடந்தாலும், இணையவாசிகளின் கவனம் முழுவதும் அந்த ‘உடையாத கண்ணாடி’ பக்கமே திரும்பியுள்ளது.