உலக சுகாதார மையமானது சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரிதான் என்று கூறியிருக்கிறது.

சீன நாட்டில் உருமாறிய கொரோனா பரவல் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்றை பல நாடுகள், கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன. இந்நிலையில், சீன நாட்டில் மீண்டும் பரவும் இந்த தொற்றால் அந்த நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீன பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து கொண்டிருக்கின்றன. அதன்படி, சீன நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளன.

இது பற்றி உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் தெரிவித்ததாவது, சீனாவில் கொரோனா பரவல் அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து சரியான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சில நாடுகள் தங்கள் மக்களை காக்கும் பொருட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியானது தான், புரிந்து கொள்ளத்தக்கது தான் என்று கூறியிருக்கிறார்.