அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கா விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இது பற்றி அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.

இதனிடையே அதே கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹேலே-வும் அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் குதித்துள்ளார். அரசியல் பயணத்தில் தனது சாதனைகள் குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிக்கி ஹாலே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவையும் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

37 வயதான விவேக் ராமசாமி ஒரு தொழிலதிபர். தந்தை எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், தாயார் மனநல மருத்துவர். இவர்கள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். விவேக் ராமசாமி சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துறையை சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகின்றார். அமெரிக்காவில் பிறந்த விவேக் ராமசாமி தற்போது குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.