இன்றைய காலகட்டத்தில் வயதானால் பெற்றோர்களை கவனிக்க ஆள் இல்லாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் மகன்களுக்கு மத்தியில் 10 வருடங்களாக தனது தாயை தன் கூடவே எங்கு சென்றாலும் அழைத்துச் செல்லும் மகனின் கதை கேட்போரை நெகிழ வைக்கிறது.

அதாவது ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள எர்ண குடம் கிராமத்தை சேர்ந்த மசகா கோபி (52) என்பவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவரது தாயார் சத்யாவதி. கடந்த 2012 ஆம் ஆண்டு கோபியின் தந்தை இறந்த பின்னர் அவரது தாய் மிகுந்த மன உளைச்சலிலும், தனிமையிலும் இருந்துள்ளார்.

அதனை அறிந்த கோபி தனது தாயை எங்கு சென்றாலும் தனது ஆட்டோவில் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு தன்னுடன் அழைத்துச் செல்லும்போது தாயின் முகத்தில் வரும் புன்னகையே தனக்கு உற்சாகத்தை தருவதாக கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கோபியின் ஆட்டோவில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு சத்தியாவதி பயணம் செய்து வருகிறார்.

அது அருகில் உள்ள கிராமங்களாக இருந்தாலும் சரி, அல்லது வழக்கமான பயணமாக இருந்தாலும் கூடவே செல்கிறார். இதுகுறித்து சத்யவதி கூறியதாவது, என்னுடைய கணவர் இறந்த பிறகு நான் முற்றிலும் உடைந்து போனவளாக இருந்தேன்.

ஆனால் தற்போது தன் மகனுடன் செல்லும்போது மீண்டும் ஒரு வலிமை கிடைத்ததாக உணர்கிறேன் நான் ஒரு நாள் வீட்டில் இருந்தாலும் கூட நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன் என உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கோபி கூறுகையில், நான் சிறுவயதிலிருந்தே மிகவும் கவனமுடன் வளர்க்கப்பட்டுள்ளேன். தற்போது இது என் முறை எனது தாய் விரும்பும் வரை அவருக்கு எப்போதும் என் ஆட்டோவில் இருக்கை உண்டு என கூறியுள்ளார்.