அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் மெக்ஹாம்ரி கவுண்டியில் கடந்த மே 1-ம் தேதி நடந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஜிமிஷா அல்வானி என்ற பெண் ஒருவர், டார்கெட் என்ற பிரபலமான ஷாப்பிங் மாலில் நுழைந்து 7 மணி நேரத்துக்கும் மேலாக ஷாப்பிங் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் எடுத்துக்கொண்ட பொருட்களுக்கு பணம் செலுத்தாமல், $1300 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.1 லட்சம்) மதிப்பிலான பொருட்களுடன் வெளியேற முயன்றதாக கடை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அவரது நடத்தை குறித்து சந்தேகத்துடன் இருந்த நிலையில், அவர் வெளியேற முயன்றதும் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மூன்று காவல்துறை அதிகாரிகள் கடைக்கு வந்து ஜிமிஷாவிடம் விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் அவர், “நீங்க என்னை அவமானப்படுத்திட்டீங்க, எனக்கு பணம் இருக்கு, என்னால வாங்க முடியும்” என தொடர்ந்து கூறியதும், அந்தப் பேச்சு முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அவர் திருடியதை மறுத்தாலும், காவல்துறையினர் அதை ஏற்கவில்லை.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் “இந்தியரின் மதிப்பை கெடுத்தார்” என கண்டித்து வருகின்றனர். மேலும், அந்த போலீஸ் அதிகாரி ஒருவர், “உங்கள் நாட்டிலும் இப்படித் திருடுகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியதுவும் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஜிமிஷா அல்வானி மீது மோசடி மற்றும் கடை திருட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.