லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், அந்த வெற்றியை விட அதிகமாகப் பேசப்படுவது பாபர் ஆசம் (Babar Azam) விக்கெட்டின் போது தேர்டு அம்பயர் நசீர் உசேன் (Nasir Hussain) செய்த குளறுபடிகள்தான்.
ஆடம் ஜம்பா வீசிய பந்தை பாபர் ஆசம் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ செய்ய முயன்றார். பந்து காலில் பட்டதும் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டனர். அம்பயர் அவுட் கொடுக்காததால் ஆஸ்திரேலியா ‘டிஆர்எஸ்’ (DRS) எடுத்தது.
பாபர் ஆசம் பேட்டிங் செய்த விதத்தால் குழப்பமடைந்த தேர்டு அம்பயர், பந்து விக்கெட்டுகளுக்கு வெளியே பட்டு நேராக ஸ்டம்ப்பை தாக்குவது தெளிவாகத் தெரிந்தும், “பிட்சிங் அவுட்சைடு லெக்” (Pitching Outside Leg) எனத் தவறாகக் கூறினார்.
மற்ற அதிகாரிகளின் உதவியுடன் தனது தவறை உணர்ந்த அவர், பந்து நேராக ஸ்டம்ப்பைத் தாக்குவதைப் பார்த்தும், களத்தில் இருந்த அம்பயரைத் தனது பழைய முடிவை (Not Out) தொடருமாறு முதலில் கூறினார். பிறகு அவசரமாக அதை மாற்றி அவுட் கொடுத்தார்.
அவர் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறியதும், முடிவுகளை மாற்றி மாற்றிச் சொன்னதும் மைக் வழியாக அனைவருக்கும் கேட்டதால், மைதானத்தில் இருந்த வர்ணனையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தனர்.
