பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் வசித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி இன்சமாம் ஷேக். இவரது 6 வயது மகள் ஷாநாஸ் காதுன், கடந்த ஜனவரி 5-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் காணாமல் போனார். தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அந்தச் சிறுமி அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் உறுதியானது.

இந்தக் கொடூரத்தைச் செய்தது அதே பகுதியைச் சேர்ந்த யூசுப் மீர் என்பது தெரியவந்தது. சிறுமியின் தாயாருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரைப் பழிவாங்க அந்தப் பிஞ்சு குழந்தையை யூசுப் மீர் கடத்திக் கொலை செய்துள்ளார்

. கொலை செய்துவிட்டு தனது குடும்பத்துடன் ஒடிசாவிற்குத் தப்பியோடிய அவரைப் போலீஸார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று கைது செய்தனர்.

ஆரம்பத்தில் இது வெறும் கொலை வழக்காகப் பார்க்கப்பட்ட நிலையில், விசாரணையில் கிடைத்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது ‘போக்சோ’ சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

தடயவியல் ஆய்வு முடிவுகள் வந்த பிறகு கூடுதல் தகவல்கள் வெளியாகும் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். தாயுடன் மோதியதற்காக ஒரு குழந்தையைத் தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.