டெல்லியில் உள்ள உத்தம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 21 வயது ரெஹ்மான் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உத்தம் நகர் பகுதியில் நடைபெற, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை தொடங்கினர். “நாங்கள் இருவரும் வேலைக்கு செல்ல, எங்கள் மகள் வீட்டில் தனியாக இருந்தார். சனிக்கிழமை அன்று, ஒரு அண்டை வீட்டுக்காரர் எனக்கு தொலைபேசி மூலம், உங்கள் மகள் கதறி அழுகிறார் என தகவல் தெரிவித்தார். உடனடியாக வீட்டுக்கு சென்ற போது, மகள், அண்டை வீட்டு இளைஞர் ரெஹ்மான் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்,” என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்து வரும் உதவி ஆய்வாளர் குர்மீத் சிங் கூறுகையில், “புதிய குற்றவியல் சட்டம் BNS பிரிவு 64 மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு சட்டம் பிரிவு 4-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் குற்றவாளி ரெஹ்மான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது,” எனத் தெரிவித்தார்.