தைவானின் வான் பரப்பில் சீனாவின் போர் விமானங்கள் தென்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சீன கடற்கரையில் அமைந்துள்ள தீவு நாடு தான் தைவான். இந்த நாடு கடந்த 1949 ஆம் ஆண்டில் இருந்து தனி நாடாக இயங்கி வருகின்றது. ஆனால் தைவானை சீனா தனி நாடாக கருதாமல் தனது மாகாணங்களில் ஒன்றாக நினைத்து அதனை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு துடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு நடந்துவிட்டால் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் கை தான் ஓங்கி நிற்கும். இது அமெரிக்காகவினுடைய ராணுவ தளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும். எனவே சீனாவின் இந்த கனவுக்கு அமெரிக்கா மிகப்பெரிய தடையாக இருக்கின்றது. மேலும் தைவானை ஆக்கிரமிப்பதற்கு சீனா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தலையிடும் என்ற அபாயமும் உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தைவானை நோக்கி சீனா 23 போர் விமானங்களையும் 4 போர் கப்பல்களையும் அனுப்பியுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து தைவான் நாட்டு ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது “இன்று காலை வரை சீன நாட்டின் 23 போர் விமானங்களும் 4 போர்க்கப்பல்களும் தைவானை சுற்றி காணப்பட்டுள்ளது. இதில் ஜே 11, ஜே 16, எல் யூ 30 போன்ற போர் விமானங்கள் ஜெலசந்தியை கடந்துள்ளது” இவ்வாறு அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனால் தைவான் அரசு பதிலடி கொடுக்கும் விதமாகவும் நிலைமையை கண்காணிப்பதற்கு வான் மற்றும் கடல் ரோந்துகளை தீவிரமாக வலுப்படுத்தி உள்ளது.