சமீப காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகின்றது. குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலிருந்தே இருதரப்பிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று காலையில் பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியில் அமைந்துள்ள ராக்கெட் உற்பத்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறியதாவது “காசாவை கட்டுப்படுத்த நினைக்கும் ஹமாஸ் அமைப்பால் இந்த ராக்கெட் உற்பத்தி ஆலை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட ராக்கெட் உற்பத்தி ஆலையில் ரசாயனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது” என்று கூறியுள்ளது.