டெய்லிஹண்ட் (Dailyhunt) மற்றும் ஜோஷ் (Josh) போன்ற புகழ்பெற்ற டிஜிட்டல் தளங்களை இயக்கி வரும் ‘வெர்ஸே இன்னோவேஷன்’ (VerSe Innovation) நிறுவனம், தனது தலைமைத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக (CPTO) பிரசன்னா பிரசாத்தை நியமித்துள்ளது.

பொறியியல் மற்றும் தரவு அறிவியல் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச அனுபவம் கொண்ட இவர், இதற்கு முன்பு ‘வெர்வ் குரூப்’ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். இனி வரும் காலங்களில் வெர்ஸே நிறுவனத்தின் ஒட்டுமொத்த தொழில்நுட்பப் பிரிவையும், எதிர்காலத் திட்டங்களையும் பிரசன்னா முன்னின்று வழிநடத்துவார்.

இந்த நியமனத்தின் மிக முக்கியமான நோக்கம், வெர்ஸே நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்துச் செயலிகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாகப் புகுத்துவதாகும். குறிப்பாக, பயனர்கள் விரும்பும் செய்திகள் மற்றும் வீடியோக்களைத் துல்லியமாகக் கண்டறிந்து பரிந்துரைப்பதிலும், படைப்பாளர்களுக்கு உதவும் வகையில் புதிய கருவிகளை உருவாக்குவதிலும் பிரசன்னா பிரசாத் கவனம் செலுத்தவுள்ளார். இதன் மூலம் அந்த நிறுவனத்தின் டிஜிட்டல் தளங்கள் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் விளம்பரத் துறையில் நவீன மாற்றங்களைக் கொண்டு வருவது இவரது மற்றுமொரு முக்கியப் பணியாகும். விளம்பரதாரர்கள் தங்களது இலக்குகளைத் துல்லியமாக அடையவும், பயனர்களுக்கு எரிச்சலூட்டாத வகையில் பொருத்தமான விளம்பரங்களைக் கொண்டு சேர்க்கவும் ஏஐ தொழில்நுட்பம் பாலமாக அமையும் என நிறுவனம் நம்புகிறது. இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், தரமான உள்ளடக்கத்தை  தொழில்நுட்ப வலிமையுடன் இணைப்பதே ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதில் வெர்ஸே நிறுவனம் உறுதியாக உள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் உமங் பேடி பேசுகையில், ஏஐ தொழில்நுட்பம் இன்று தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளதாகவும், பிரசன்னாவின் அனுபவம் தங்களது கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரும் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்றுள்ள வெர்ஸே இன்னோவேஷன், இந்த புதிய நியமனத்தின் மூலம் இந்திய டிஜிட்டல் சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தயாராகி வருகிறது.