வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வகுப்பறைகளுக்கு சென்ற கலெக்டர், மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை எப்போதும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், பிளஸ்-2 வகுப்பறைக்கு சென்றார். இதனையடுத்து கலெக்டர் இயற்பியல் வரும் மின்னாற்றல் குறித்த பாடத்தை மாணவர்களுக்கு நடத்தினர். பின் சத்துணவு தரமாக உள்ளதா என சாப்பிட்டு பார்த்து பரிசோதித்தார்.

இதனை தொடர்ந்து கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்குள்ள கிராமத்தில் மேற்கொள்ளப்படும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் பற்றிய கணக்கெடுப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புற நோயாளிகள் பிரிவில் சிரிச்சைக்காக வந்திருந்த பொது மக்களிடம் சிகிச்சை அளிக்கும் முறைகளை பற்றி கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சப்-கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், ஒன்றியக் குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.