மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் பசுமலை உச்சியில் கபாலீஸ்வரர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆயிரம் அடி உயரமுடைய கோபாலி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென வேகமாக பரவியது. இதனை பார்த்த மாடக்குளம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க இயலவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பீகாரை சேர்ந்த சோட்டுகுமார் என்பவர் கையில் 10-க்கும் மேற்பட்ட தீப்பட்டிகளுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.