வேலூர் மாநகராட்சி அலவலகத்தில் வரி வசூலிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றதில் உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன் மற்றும் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தலைமையில் கூட்டம்  நடைபெற்றது. அப்போது அவர் பேசியுள்ளதாவது, வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் எடுத்தவர்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். மேலும்  வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என்றும் அப்படி செலுத்தவில்லையென்றால் அந்த கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் 4 மண்டலங்களில் சொத்துவரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, வீட்டுவரி, தொழில்வரியை பலர் செலுத்தாத காரணத்தால் வருவாய்த்துறை உதவி கமிஷனர் தலைமையில் அனைத்து வருவாய் அலுவலர்களும் வீடு, வீடாக சென்று குடிநீர் மற்றும் வீட்டுவரியை வசூலிக்க வேண்டும். இதனையடுத்து பல மாதங்களாக வரி செலுத்தாமல் இருக்கும் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும். வருகிற மார்ச் மாதத்திற்குள், நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் விரைந்து வசூலிக்க வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். இக்கூட்டத்தில் 4 மண்டலங்களில் உள்ள உதவி வருவாய் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.