மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், வெள்ளம் பெருக்கெடுத்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் மதுரை மாநகரில் உள்ள கோரிபாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இரு கரைகளும் பாதிப்படைந்து, கல்பாலம் அருகே உள்ள வைகை கரையோர சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்கியது. மதகுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மதுரை வைகை ஆற்றில் இறங்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் தடை விதிக்கப்பட்டது.

மேலும் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை அணைக்கு 20,000 கனஅடி தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையை பொருட்படுத்தாமல், மதுரையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால்,

மாணவர்கள் மழைக்கு மத்தியில் பயணித்து, கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மழையால் தாழ்வான பகுதிகளில் வடிகால் உள்ளிட்ட பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.