நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிலர் மனு கொடுத்தனர். அதில்  கூறியுள்ளதாவது, மேலூர் ஒசாஹட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரு நபர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதனால் தலா 3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் எங்கள் பகுதியை சேர்ந்த 15 பேர் கொடுத்து ஏமாந்துள்ளார்கள். மேலும் பணம் வாங்கிய அந்த மோசடி நபர் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. எனவே இது பற்றி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்த போது, பணத்தை திரும்ப வழங்குவதாக போலீசாரிடம், அந்த மோசடி நபர் எழுதி கொடுத்தார். ஆனால் இதுவரையில் பணத்தை திரும்ப வழங்கவில்லை. நாங்கள் வட்டிக்கு வாங்கி அவரிடம் பணத்தை கொடுத்துள்ளோம். எனவே விரைவாக அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.