தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடை பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை வாங்கிக் கொண்டு மட்டுமே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை காக்க வைக்க கூடாது. வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. விவசாயிகளிடம்  கையூட்டு பெறக்கூடாது என கூடுதல் டிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தஞ்சையை அடுத்த குருங்குளம் வல்லம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரையின் பேரில் தஞ்சை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தஞ்சை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெறப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தனர். அதேபோல் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.