புது தில்லியில் வயிற்று வலிக்காக விடுப்பு எடுத்த ஊழியரிடம், “வீட்டிலிருந்தே வேலை பாருங்க” என்று நிறுவன உரிமையாளர் வற்புறுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட ஊழியர், இந்த விவகாரத்தை வாட்ஸ்அப் உரையாடலுடன் இணையத்தில் பகிர்ந்ததோடு, தங்களது நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் “நான் கடந்த 6-7 மாதமாக மார்க்கெட்டிங் கோஆர்டினேட்டராக பணிபுரிகிறேன். ஒரு மாதத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுப்பேன். இது ஒரு சிறிய நிறுவனம். அலுவலகத்தில் 2 பேர் மட்டுமே வேலை செய்கிறோம், மற்றவர்கள் 2-4 பேர் வரை வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இந்த நிறுவனம் 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.”

“நேற்று இரவு முதல் கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தேன். இன்று காலை நானாகவே விடுப்பு கேட்டேன். அதற்குப் பதிலாக, எனக்கு வாட்ஸ்அப் மூலம் ‘கிளையண்ட்ஸ் உடன் கோஆர்டினேட் பண்ணு’ என வேலை செய்ய சொல்லியிருக்கிறார். இது விடுப்பு எடுத்த பின்பும் வேலை செய்யும் கட்டாயத்தை உருவாக்கும் செயல்.”என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமன்றி “நான் என் சொந்த லேப்டாப்பை தான் பயன்படுத்துகிறேன். நிறுவனம் எதையும் வழங்கவில்லை. இதுபோல உரிமையோடு வேலை வாங்குகிறார்கள், ஆனால் சம்பளத்தில் நரம்பை நசுக்கிறார்கள்” என வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், “25 வருடங்களாக இயங்கும் நிறுவனத்தில் இன்னும் 2 பேர் மட்டுமே வேலை செய்கிறார்களா?”, “இந்த நிறுவன வளர்ச்சியெல்லாம் எங்கே?” என்றும்,  “நீங்க மருத்துவமனையில் ஐ.வி வைத்தபடியே இருந்தீங்கன்னு சொல்லுங்க”,என்றும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.