தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றார்
அதன் பிறகு தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் சோலார் ஆற்றல் நிறுவப்படும். இந்த 3 மாவட்டங்களில் சூரிய ஒளியின் ஆற்றல் அதிகமாக இருப்பதால் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும். இதற்கு ஏதுவாக புதிதாக 400 கி.வோ, 230 கி.வோ, 100 கி.வோ துணை மின் நிலையங்கள் நிறுவப்படும். இதனையடுத்து சென்னை, கரூர், மதுரை மற்றும் கோவை ஆகிய மாநகராட்சிகளில் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

மேலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் திருக்கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரீஸ்வரர் திருக்கோவில், கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில், கோயம்புத்தூர் கோனியம்மன் திருக்கோவில், ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில் மற்றும் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் போன்ற கோவில்களில் தேர் திருவிழாவின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் அந்த சமயத்தில் பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காகவும், மின் விபத்துகளை முற்றிலும் தடுப்பதற்காகவும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும் என்று கூறினார்.