தமிழக சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், பசுமை புரட்சிக்கு வித்திடும் விதமாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றும் விதமாகவும் நடப்பு ஆண்டில் 50,000 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றார்.

அதோடு சாதாரண வரிசை, சுயநிதி திட்டம், சிறப்பு முன்னுரிமை, தட்கல், கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் திட்டங்களின் மூலம் வழங்கப்படும். அதன் பிறகு மின்தடை இன்றி மின்னோட்டம் இருக்கும்போதே பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் போன்றவற்றை புதிய இன்சுலேட்டட் மேற்கொள்வதற்காக ஏரியல் பக்கெட்டுடன் கூடிய வாகனம் கொள்முதல் செய்யப்படும். மேலும் அதிக உயர் மின்னழுத்தம் கொண்ட பகுதிகளில் பலவீனமான மற்றும் குறைபாடுள்ள இன்சுலேட்டரை கண்டறிவதற்காக அதிக சக்தி வாய்ந்த கேமராவுடன் கூடிய ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும் என்று கூறினார்.