புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஏராளமான மதுபான கடைகள் இருப்பதோடு அனைத்து வகையான வெளிநாட்டு மதுபானங்களும் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மாநில அரசும் சுற்றுலா மூலம் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களில் 150-க்கும் மேற்பட்ட ரெஸ்டோபர்கள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் catamaran brewing co என்ற தனியார் நிறுவனம் brew house tour என்ற பெயரில் பீர் பஸ் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பீர்பஸ் மூலம் சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த பயணத்தின் போது பேருந்தில் மது குடிப்பதற்கான அனுமதி கிடையாது. புதுச்சேரியில் அரசு அனுமதி கொடுத்த இடங்களில் மட்டும் மதுபானம் குடிக்க அனுமதி வழங்கப்படும். சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகள் பீர் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அன்றைய தினமே மீண்டும் சென்னைக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள். இந்த பேருந்தில் செல்வதற்கு ஒரு பயணியிடம் சுமார் 3000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பீர்பஸ் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இந்த பீர் பஸ் திட்டம் தற்போது மது பிரியர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.