தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். இவர் சமீபத்தில் கட்சி கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகப்படுத்திய நிலையில் விக்கிரவாண்டியின் வருகிற 23ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார். இதற்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் கட்சி தொடங்கியது திமுகவுக்கு தான் பிரச்சனை என்றும் அதனால் நடிகர் விஜய்க்கு பல வழிகளில் தடங்கள் ஏற்படுத்துவதாகவும் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மூத்த தலைவரும் மாநில ஒருங்கிணைப்பாளருமான எச். ராஜா ‌ ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, விஜயின் கொள்கை என்பது நீட் தேர்வை எதிர்ப்பது மற்றும் கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வருவது போன்றதாகும். எனவே விஜய் திராவிட கட்சிகளுக்கு தான் போட்டியாக இருப்பார். விஜய் அரசியலுக்கு வந்ததால் பாஜகவிற்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் திராவிட கட்சிகளின் வாக்குகளை பிரிப்பார் என்று கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே தமிழக அரசியலில் விஜயை திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று கூறப்படும் நிலையில் தற்போது அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் வாக்கு வங்கிகள் விஜயால் சிதறும் என்று எச் ராஜா கூறியது பேசும் பொருளாக மாறி உள்ளது.