தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக நடந்த இந்த சம்பவத்தில் நீதிமன்றம் தமிழக வெற்றி கழகத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில் நடிகர் விஜய்க்கு தலைமை பொறுப்பு இல்லை என விமர்சித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசினார். அவர் இந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் விஜய் வருத்தப்பட்டு இருந்தால் நீதிமன்றம் இந்த அளவுக்கு கண்டனம் தெரிவித்திருக்காது என்று கூறினார்.

அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் சொன்னபடி எந்த ஒரு கட்சித் தலைவர்களும் தன்னுடைய தொண்டர்கள் மற்றும் மக்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார். ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவது போல் தவெகவுக்காக வக்கீல் போல் வாதாடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

தூத்துக்குடிக்கு குழு அனுப்பாத பாஜக கரூருக்கு மட்டும் அனுப்பியது ஏன்.? இதற்குக் காரணம் ஆளும் கட்சி தான் என எடப்பாடி பழனிசாமி பேசுவது தரம் தாழ்ந்த அரசியல். பழனிச்சாமிக்கு இணையாக பாஜகவும் அரசியல் செய்கிறது. சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. ருசி கண்ட பூனை மாதிரி எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட இந்த விவகாரத்தில் நிதானமாக பேசுகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியல் செய்கிறார். கரூரில் நடந்தது விபத்து தான். இந்த முறை எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்தாமல் அமமுக ஓயாது. மேலும் வீடு பத்திகிட்டு எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்பது போல் இந்த நேரத்தில் இபிஎஸ் கூட்டணி கணக்கை பேசிக்கொண்டு இருக்கிறார் என்றார்.