மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 6 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுக்காக மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருந்துகள் வழங்கப்பட்டிருந்தன.
மருந்துகள் குடித்த பின்னர், குழந்தைகளுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
அந்த விசாரணையில், சிந்த்வாராவில் உயிரிழந்த குழந்தைகள், தமிழகத்தின் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ சிரப் மற்றும் மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து ஆகியவற்றை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் குருபாரதி தலைமையிலான குழுவினர், குறித்த மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். ஆய்வின் அடிப்படையில், அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
அத்துடன், “மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?” என்ற வகையில், நிறுவனம் விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஃவிளக்கம் பெறப்பட்ட பின், தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
