உலகின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘xAI’ ஆல் உருவாக்கப்பட்ட ‘Grok’ என்ற ஏஐ சாட்பாட்டிற்கும் (AI Chatbot) தனக்கும் நடந்த உரையாடலைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தடைகளை நீக்கும் இந்து கடவுளான விநாயகரின் சிலையை அவர் பதிவிட்டு, “இது என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்கு, அந்த ஏஐ சாட்பாட் அளித்த விரிவான பதில், இணையத்தில் உள்ள பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எலான் மஸ்க்கின் கேள்விக்கு, அந்த ஏஐ சாட்பாட், “இது பரவலாக வழிபடப்படும் இந்து தெய்வமான விநாயகரின் சிறிய பித்தளை (அ) வெண்கலச் சிலை” என்று பதிலளித்ததுடன், அதன் சின்னம் மற்றும் முக்கியத்துவத்தையும் துல்லியமாக விளக்கியுள்ளது.

“தும்பிக்கை, ஒற்றைக் கொம்பு, மோதகம், அங்குசம் மற்றும் உடைந்த கொம்பு ஆகியவற்றைக் கொண்ட நான்கு கரங்கள், தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் தோற்றம், காலடியில் எலி வாகனம் ஆகியன இதன் முக்கிய அடையாளங்கள்” என்றும் Grok தெரிவித்துள்ளது. ஏஐ-யின் இந்த துல்லியமான விளக்கத்தையும், கலாச்சாரப் புரிதலையும் கண்டு பயனர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.